முகப்பு |
![]() |
![]() |
![]() |
அஞ்சலி
கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ். ஜெயபாரதி புனைபெயர்: ஜெய்பி
பல துறைகளில் வல்லுனராகவும் ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ். ஜெயபாரதி அவர்கள். மருத்துவம், மனோவியல், சித்தரியல், ஆன்மீகம், ஆகம தந்திர சாஸ்திரம், வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, அறிவியல், கலை, பாரம்பரியம், மொழிஇயல், பழந்தமிழ் இலக்கியம் ஆகிய துறைகளில் புலமை பெற்றவர். [ஜெய்பீ-உடன் மலேசியத் தமிழ் எழுத்துலக இணையதளம் உருவாக்கிய கிருஷ்ணா ராஜ்மோகன்]
பத்திரிகைகளிலும், இதழ்களிலும் ஏராளமான கட்டுரைகள் எழுதி புகழ் பெற்றவர். இவர் எழுதிய வருங்காலவியல், தேவிவழிபாடு, தமிழ்த் தாத்தா, வால்நட்சத்திரம் முதலிய நீள் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. “வேதமும் அறிவியலும்” என்ற தலைப்பில் முதற்பாகத்தை ஆறு மணி நாற்பது நிமிடமும், இரண்டாவது பாகத்தை ஏழு மணி இருபது நிமிடமும் பேசி அரிய சாதனை புரிந்தவர். இசை, ஓவியம், சிற்பக்கலை, ஜோதிடம், கைரேகை, ஆருடம், பேச்சு, நாடகம், போன்ற பல கலைகளில் புலமைப் பெற்றவர். தமிழகத்தில் அவர் செய்த“அருவியூர்” நகரத்தின் கண்டுபிடிப்பு, குறிஞ்சி மலர் போன்றவை தமிழகத்தில் அவருக்கு புகழ் தேடித் தந்தவையாகும். மலேசியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, “ஜேய்பி” என்ற பெயரில் இணையத்தில் தன்னை இணைத்துக் கொண்ட மூத்த தலைமுறை இவர். “அகத்தியம்” என்ற இவரது மடலாடற்குழு, சுமார் நாற்பத்திரெண்டாயிரம் மடல்களை கொண்டுள்ளது. ஐந்து வலைதளங்கள் இவரது உருவாக்கத்தில் உள்ளன. தமிழிலும் ஆங்கிலத்திலும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மடல்கள் எழுதியுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் உண்டு. “விஸ்வா கொம்ப்ளெக்ஸ்” எனும் இவரது வலைதளத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், கதைகள், ஆய்வுகள் பதிவேற்றி உள்ளார். “இணைய இலக்கியம்” என்ற புதிய துறையில் முதல் நூலை வெளியிட்டு சாதனை புரிந்தவரும் இவரே. கடந்த 45 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு, சில லட்சங்களை செலவிட்டு, கிடைப்பதற்கரிய 5,000 நூல்களை வாங்கி, தன் வீட்டு நூலகத்தில் சேமித்து வைத்துள்ளார். “ராஜேந்திர சோழரின் கடாரப் படையெடுப்பு” இவரது ஆய்வுகளில் மிக அரிதானது. இதுவரை “கடாரத்தின்” கதையை யாரும் இவ்வளவு துல்லியமாகவும் துணிச்சலாகவும் ஆராயவில்லை என்பதே உண்மை. மலேசியத் தமிழர்களால், “சித்தர்”, என்றும், “ஞானி” என்றும்,“அவதாரப்புருஷன்” என்றும் அழைக்கப்படும் அபூர்வப் பிறவியான ஜெய்பி, அவர்களுக்கு கிடைத்த விருதுகள் பல. அவற்றுள் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் விருதும் , டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்களால் வழங்கப்பட்ட “கடாரத்தமிழ்ப்பேரறிஞர்” என்ற உயரிய விருதும் குறிப்பிடத்தக்கவை. (இவருக்கு பண முடிப்பும், "கடாரத்தமிழ்ப்பேரறிஞர்" என்ற விருதும் கிடைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தவர், கெடா மாநில முன்னாள் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் தலைவர் திருமதி பாக்கியம் அம்மையார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.) ஒரு ஆர்பாட்டமோ சுய விளம்பரமோ இல்லாத இந்த அவதாரப் புருஷனை மலேசிய இயக்கங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் இன்றைய இளைய தலைமுறையினர் பலர் இவரைப்பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பதும் வேதனையே. அவரை சந்தித்து உரையாடிய அந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன். ஆளுமைகள் மறக்கப் பட்டது யார் கொடுத்த சாபமோ? அரிய படைப்புகளை உள்ளடக்கிய பொக்கிஷங்கள் இவரது வலைதளங்கள் : www.treasurerhouseofagathiyar.net
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். அவரது படைப்புகளை பொக்கிஷங்களாக காப்போம். அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்.
பாலகோபாலன் நம்பியார்
தோற்றம்: 7/5/1952 * மறைவு: 9/5/2015
மலேசியாவில் தமிழ் எழுத்துலக அன்பர்களுக்கு நன்கு அறிமுகமானவரும், கிள்ளான் மாவட்டத் தமிழ் வாசகர்-எழுத்தாளர் இயக்கத் தலைவருமான, பாலகோபாலன் நம்பியார் கடந்த 9/5/2015 அன்று டெல்லியில் காலமானார்கள். பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். பால கோபாலன் நம்பியார் அவர்களின் தமிழ்ப் பணி, மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் என்றென்றும் நிலைத்திருக்கும். கிருஷ்ணா ராஜ்மோகன்
மலேசியத் தமிழ் எழுத்துலகம் உங்களை வரவேற்கிறது.. .. மலேசியாவில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய பேரருளார்களை உலகுக்கு அடையாளம் காட்டவும், மலேசியப் படைப்பிலக்கிய வளர்ச்சியை உலகப் பார்வைக்கு கொண்டு செல்லவும் இந்த அகப்பக்கம் நீண்ட யாத்திரை மேற்கொண்டுள்ளது. மலேசியத் தமிழ் தொண்டர்களுக்கு இந்த வலைதளம் சமர்ப்பணம். .. PERMISSION இந்த வலைதளத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ள ஆக்கங்கள் - படங்கள், உரைகள் , கட்டுரை, குறிப்புகள், படைப்புகள் இவை உலகெங்கினும் உள்ள தமிழ் அன்பர்கள் வாசிக்கவும் சுவாசிக்கவும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் உள்ளடக்கங்களை பயன்படுத்த விரும்புவோர், "மலேசியத் தமிழ் எழுத்துலக இணையதளம்" உரிமையாளரின் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும். உள்ளடக்கங்களை திருத்தியும், மாற்றியும் படங்களை போட்டோ-ஷோப் மூலம் மாற்றுவதும், பிற அச்சு-மின் ஊடகங்களில் பதிவேற்றம் இதில் அடங்கும். உரிமையாளர் அனுமதியின்றி அவரது ஆக்கங்களை பயன்படுத்துவது பதிப்புரிமை மீறும் செயலாகும். No content (including images) on this website may be reproduced, stored or transmitted in any form or by any means electronic, mechanical, photocopying, recording or otherwise, either in whole or in part, without the explicit permission of the author. Any other use of materials on this site without our prior written consent is strictly prohibited. மலேசியத் தமிழ் எழுத்துலகம் வளர்ந்த கதை (தோற்றம் 18/5/1942 - மறைவு 27/5/2013 )
2006-ஆம் ஆண்டு, பினாங்கு தமிழர் திருநாள் நிகழ்ச்சியில் உரையாற்ற, ‘தமிழ்ச் சேவைச் சுடர், [இன்று அமராகி விட்ட] திரு. த. முனியாண்டி அவர்கள் என்னை அழைத்திருந்தார். அதற்காக இணையம் வழி சில புதிய தகவல்களை தேடினேன். ஆச்சரியம், ஆனால் உண்மை. விரல் தட்டிக்கொடுத்த சுட்டிகள் உலகத் தமிழ் இலக்கியத்தை கணனித் திரையில் கொண்டு வந்தன; படைப்பாளர்களின் விவரங்கள், அவர்தம் படைப்புகள் மட்டுமன்றி, தமிழ் மொழி வளர்ச்சிக்கு வித்திட்ட சங்கங்கள், அமைப்புகள், போன்ற பல செய்திகள் மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்டு, சிறப்பாக பதிவாகியிருந்தது கண்டு திக்கு முக்காடிப் போனேன். இதுபோல், ‘மலேசியாவில் தமிழ் இலக்கியம்’ என்ற இணையதளம் உருவாக்கி, மலேசியாவில் தமிழ் வளர பாடுபட்டவர்களை உலகுக்கு அடையாளம் காட்டிட வேண்டும் என்று அந்த நிமிடம் எனக்குள் உதித்த சிந்தனையே இந்த இணையத்தளம் உருவாகிட அஸ்திவாரம் அமைத்தது. அமரர் திரு. த. முனியாண்டி அவர்களிடம் இதுபற்றி கூறியபோது, அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பினாங்கு மாநிலத்தில் த. முனியாண்டி –அவர்களைத் தெரியாத தமிழரோ, தமிழ் இயக்கமோ இல்லை எனலாம். மணி மன்றம், வாசகர் மன்றம், தமிழர்திருநாள் எற்பாட்டுக்குழு, பெற்றோர்-ஆசிரியர் சங்கம் என பல்வேறு நிலைகளில் தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் சேவைகள் பல ஆற்றியுள்ளார். ‘அருமையான சிந்தனை- இதுவும் தமிழ்ச் சேவைதான்; என்று என்னை பாராட்டி ஊக்குவித்தார். மேலும், தன்னால் ஆன உதவிகளையும் செய்து கொடுப்பதாக உறுதி அளித்தது மட்டுமல்லாது, பல நூல்களையும் தேடி அனுப்பிவைத்த நேசமுள்ள மனிதர் அவர். அதன் பிறகு, இந்த இணையத்தளம் உருவாக்கிட, மூத்த எழுத்தாளர்களின் உதவி தேவைப்பட்டது. "எங்களால் தான் மலேசியாவில் தமிழ் வாழ்கிறது; தமிழ் வளர்கிறது" என்று மேடையில் மார்தட்டும் பல தமிழ் அன்பர்களை நாடினேன். "தமிழ் இணையத்தளமா? "இதெல்லாம் வேலைக்கு ஆகாது; இதில் எல்லாம் எங்களை சம்பந்தப் படுத்தாதீர்கள்" என்று புற முதுகு காட்டி ஓடியவர் பலர்; "இன்று போய் இன்னொரு நாள் வாருங்களேன்" என்று தட்டிக்கழித்தவர்கள் சிலர்; "உங்களுக்கு என் இந்த வீண் வேலை" என்று சொன்னவர்கள் பலர் . இதை எல்லாம் கேட்டு சோர்ந்து நின்றபோது ஓடி வந்து கை கொடுத்தவர் புலவர் முருகையன் அவர்கள். "கவலை வேண்டாம் அம்மா, நானிருக்கிறேன்" என்று அன்று அவர் சொன்ன அந்த வார்த்தை இன்னும் என் செவிகளில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. சுறுசுப்பாக செயல்பட்டார்; தேவைப்பட்ட பல நூல்களை திரட்டிக்கொண்டு வந்தார். ஒரு இணைய இதழ் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் புலவர் முருகையன் அவர்கள். அவரது அறிவும் ஆற்றலும், உழைப்பும் கிடைக்காதிருந்தால் இந்த இணையதளம் உருவாகியிருக்காது என்ற உண்மையை இவ்விடம் குறித்து வைப்பது சிறப்பு. (பெருமைக்கும் வணக்கத்துக்கும் உரிய அந்த மூத்த இலக்கியவாதியும், அனுபவமிக்க பத்திரிகை-இதழ் ஆசிரியரும், அண்ணாமலை-சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் 'புலவர் பட்டம் பெற்றவருமாகிய புலவர் முருகையன் அவர்கள் இன்று நம்முடன் இல்லை.).
‘மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு’ எழுதிய இலக்கியக் குரிசில் மா.இராமையா அவர்களும் பல நூல்களை அளித்து உதவியது மட்டுமல்லாது வாழ்த்து செய்தியும் அனுப்பியிருந்தார். மலேசியாவின் இஸ்லாமிய இசைக்கலைஞர் ஹாஜி சையிடு அலி அவர்களும் 'நம்பிக்கை" இதழ் ஆசிரியர் அருமைச் சகோதரர் பிஃதாவுடின் அவர்களும் 'மலேசியாவில் தமிழ் வளர்த்த இஸ்லாமியர், அவர்தம் தமிழ் இலக்கிய பங்களிப்பு தொடர்பான ஆவணங்களை தேடி அனுப்பி வைத்தார்கள். என் வீட்டிலும்அலுவலகத்திலும், குவிந்தன தமிழ் நூல்கள்.! தேவையான எல்லா நூல்களும் கிடைக்கப் பெற்றன. ஆனால், முழு நேர நிர்வாகியாகவும், தொலைக்காட்சி டாக்-ஷோ நிகழ்ச்சிகளுக்காக இடைவிடா பணிகளை மேற்கொண்டிருந்த எனக்கு, தமிழ் இணையத்தளம் ஒன்றை பதிவு செய்வது, தகவல்களை தட்டச்சு செய்வது, படங்களை ஸ்கேன் செய்வது, மற்றும் இன்னபிற டெக்னிகல் வேலைகளை எல்லாம் சுயமாக மேற்கொள்வது என்பது இயலாத காரியமன்றோ? அதற்காக, ‘தமிழ் இணைய சேவைகள்’ செய்யும் சில நிறுவனங்களை அணுகினேன். ஒரு சிலர் கேட்ட தொகை வாயைப் பிளக்க வைத்தது. பெயரளவில் மட்டுமே தமிழ்ச்சேவைகள்! வேறு சிலரோ, ‘இந்த ஆட்டத்துக்கு நாங்க வரலே’ என்று ஒதுங்கிக்கொண்டனர். நானும் கணவரும், பல நாட்கள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். அதன்படி வெப்-மாஸ்டர்ஸ், அதாவது வலைதளம் உருவாக்கம் துறையில் வேலை செய்யும் சிலரை – பகுதி நேரமாக இந்தப் பணியில் அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் அளிக்க முடிவு செய்தோம். எங்கள் வீட்டின் ஒரு பகுதி இணைய வடிவமைப்பு அலுவலகமானது. ஈப்போவில், இணையத்தளங்ளின் முகப்பு வடிவமைக்கும் துறையில் பிரசித்திபெற்ற ஒரு நிறுவனம், குறைந்த விலையில் நமது முகப்பு பகுதியை வடிவமைத்து தர ஒப்புக்கொண்டார்கள். ஆரம்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்பான ஆரம்பக்கட்ட வேலைகளை இணைய வடிவமைப்பாளர்கள் செய்தாலும், இறுதியில், தமிழில் யூனிகொர்ட் முறையில் தட்டச்சு செய்ய பலரை அணுகியபோது, ‘அதில் அனுபவம் இல்லை’ எனவும், சிலர், தங்கள் வசிப்பிடம் தூரமாக இருப்பதால் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற இயலாது எனவும், ஒரு சிலர், தங்களுக்கு இணைய வசதிகள் இல்லை என்ற – இதுபோன்ற பல காரணங்களால், கிடைக்கப் பெற்ற தரவுகளை தொகுத்து, யூனிகோர்ட் முறையில் தட்டச்சு செய்யும் பணியானது, ஊரெல்லாம் சுற்றி விட்டு, திரும்பி மீண்டும் என்னிடமே வந்து விழுந்தது. வேலை முடிந்து, வீட்டுக் கடமைகள் செய்த பின், இரவு 12 – சில நாட்கள் 2-3 மணிவரையில் கண் உறக்கம் தொலைத்து தட்டச்சு செய்ய வேண்டியிருந்தது. தட்டச்சு செய்தவற்றை, பகுதி நேர இணைய பணியாளர்களிடம் ஒப்படைக்க அவர்கள், குறிப்பிட்ட தலைப்புகளின் பதிவு செய்தார்கள். 'மலேசியத் தமிழ் எழுத்துலகம்' என்ற இணைய இல்லம் மெல்ல மெல்ல உருவாகி, ஆறு மாதங்களில் ‘வீடு’ தயாராகிவிட்டது. டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் இனி அடுத்து, இதனை தமிழ் ஆர்வலர்களிடம் அறிமுகம் செய்யவும் அவர்கள் தங்களைப் பற்றி எழுதவும், தங்கள் படைப்புகளை பதிவு செய்யவும் வழி அமைத்துத் தர வேண்டும் அல்லவா? புலவர் முருகையன் இதற்கான ஏற்பாடுகள் செய்யத்தொடங்கினார். இது குறித்த பத்திரிகை செய்திகள் அனுப்பப்பட்டன. சென்னை, உலகத் தமிழர் மையம் - உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 'செந்தமிழ் தேனீ" இரா.மதிவாணன் அவர்கள் "லண்டன் சுடரோளி" இதழில் இந்தச் செய்தியை வெளியிட்டார். மலேசியாவின் மூத்த நாளிதழ், தமிழ் நேசன், இந்தச் செய்தியை ஞாயிறு பதிப்பில் முதல் பக்கத்தில் பிரசுரித்து நமது முயற்சிக்கு பெருமை சேர்ந்தது. மலேசியத் தமிழ் படைப்பாளர்களை உலகுக்கு அடையாளம் காட்டவும், மலேசியப் படைப்பிலக்கியத்தை அயலகத் தமிழர்கள் அறிந்து கொள்ளவும் உருவாக்கப்பட்ட முதல் ‘மலேசியத் தமிழ் எழுத்துலகம்” என்ற பெருமை ஒரு புறம் கிடைத்தாலும், எழுத்துலகத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு பெண் இதனை செய்திருக்கிறாள் என்பதும் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. 'இனத்துக்கும் மொழிக்கும் நாம் செய்யும் தொண்டு எந்த வித பிரதி பலனையும் எதிர் பார்க்காத ஒன்றாக இருக்க வேண்டும்' என வாழ்ந்து காட்டிய என் தந்தையாரின் வழித்தடத்தை நானும் பின்பற்றியுள்ளேன் என்பதே திருப்தியாக இருந்தது. மொழிப்பற்று இருந்தால் போதுமே!. கணவரின் ஒத்துழைப்பு, ஒரு சில எழுத்துலக நண்பர்கள், மற்றும் புலவர் முருகையன் போன்றவர்களின் ஆதரவும் ஊக்குவிப்பும் போற்றுதற்குரியவை என்றால் அது மிகையில்லை. ‘மலேசியத் தமிழ் எழுத்துலகம்” மென்-அறிமுகம்’ செய்ய புலவர் முருகையன் அவர்கள், மலேசியாவின் தமிழ் இலக்கிய அறங்காவலர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களை சந்திக்க அழைத்துச் சென்றார். புதியவர்களின் சிந்தனைகளுக்கு எப்போதும் உரமளித்து ஊக்குவிக்கும் டான்ஸ்ரீ அவர்கள், “ஒரு இயக்கம் செய்யவேண்டியதை தனி ஒருத்தியாக செய்திருக்கிறீர்களே’ என்று மனம் திறந்து பாராட்டினார். வலைதளம் உருவாக்கிய செலவுகள் பற்றி கேட்டபோது, அனைத்து செலவுகளும் நானும் என் கணவரும் ஏற்றுகொண்டுள்ளோம் என்று கூறியபோது, ஆச்சரியப்பட்டார். இந்த இணையத்தளத்தை அறிமுகம் செய்ய ஒப்புக்கொண்டு, தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற சேவை உணர்வில், ‘இணைய அறிமுக விழா’வுக்கு அரங்கம் மற்றும் 100 பேருக்கான உணவு செலவுகளையும், அவரே ஏற்றுக்கொள்வதாக கூறி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ‘மேன்மக்கள் மேன்மக்களே’. ஆக, 18.10.2006 ஆம் நாள், www.tamilwriters.net. என்ற அகப்பக்க முகவரி பதிவு செய்யப்பட்ட 'மலேசியத் தமிழ் எழுத்துலகம், 15.2.2007- ஆம் நாள், டத்தோ சகாதேவன், டத்தோ அ.வைத்திலிங்கம், பேராசிரியர் முனைவர் எஸ். குமரன், பேராசிரியர் கந்தசாமி, மூத்த எழுத்தாளர்கள் ஜீரா, அமரர் பா.சந்திரகாந்தம், புவான்ஸ்ரீ விஜி ராமா, மற்றும் எழுத்தாள நண்பர்கள், கலைஞர்கள் பலர் அடங்கிய சபையில், கோலாலம்பூர், டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில், இலக்கிய காவலர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் அவர்களின் திருக்கரங்களால், மென் அறிமுகம் கண்டது. அதன் பின், எழுத்தாளர்கள் அனுப்பி வைத்த குறிப்புகளும் படைப்புகளும் பதிவு செய்யப்பட்டு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலேசியத் தமிழ் எழுத்துலகம்’ வளர்ந்தது; இன்னும் வளர்ந்து வருகிறது. இன்று உலகின் பல நாடுகளிலிருந்து பல பயனர்களை பெற்றுள்ளது. தங்கள் குறிப்புகளை அனுப்பி வைக்காத பட்சத்தில் நம் தமிழ் பத்திரிகைகள் பிரசுரிக்கும் தகவல்களை சேகரித்து தொகுத்து பதிவு செய்து வருகிறோம். இந்த வகையில் தமிழ்ப் பத்திரிகையாசியர்களுக்கு எங்கள் நன்றி. எங்கள் இணைய இலக்கியப் பயணத்தில் அனைவரும் பயணிக்கலாம். உங்கள் நூல்களை அறிமுகப்படுத்தலாம். புதிய பதிவுகளை இணைக்கலாம்; உறவுப்பாலம் அமைக்கலாம். வாரீர். இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் படைப்புகளை நேரடியாக அனுப்பு வைக்கவும். தடைகளை உடைத்து தமிழால் இணைவோம்.
கிருஷ்ணா ராஜ்மோகன், கோலாலம்பூர்.
![]() |